கோலி மோசமான கேப்டனல்ல, ரோகித் சர்மா தான் சிறப்பானவர் : கவுதம் காம்பிர்

by Nishanth, Nov 24, 2020, 16:25 PM IST

விராட் கோஹ்லியை ஒரு மோசமான கேப்டன் என்று கூற முடியாது, ஆனால் ரோகித் சர்மாவை ஒரு சிறப்பான கேப்டன் என்று எந்த சந்தேகமும் இல்லாமல் கூறலாம் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர்.சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 13 வது சீசன் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பிர் அடிக்கடி இந்த கருத்தை வலியுறுத்தி வருகிறார்.

இந்த ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி தொடர்ந்து 3வது முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை மொத்தம் 5 முறை கோப்பைகளை மும்பை வென்றுள்ளது. இதுவரை ஐபிஎல் சீசன் வரலாற்றில் தொடர்ந்து 3 முறை கோப்பையை எந்த அணியும் வென்றது கிடையாது. அதுமட்டுமில்லாமல் 5 கோப்பைகளை வென்ற ஒரே அணியும் மும்பை தான். இந்த 5 தடவையும் மும்பையின் கேப்டனாக இருந்தவர் ரோகித் சர்மா. எனவே இந்திய அணியின் கேப்டனாக அவரை நியமிக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவுதம் காம்பிர் ஒரு விளையாட்டு செய்தி நிறுவனத்திடம் கூறியது:கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் ஐபிஎல் போட்டியில் நடத்திய சாதனைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தற்போது இந்திய அணியில் வீரர்களை எப்படி தேர்வு செய்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடுபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதைப் பார்ப்பதைப் போலவே கேப்டன்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும் பரிசீலிக்க வேண்டும். வீரர்களைத் தேர்வு செய்யும் போது ஏன் கேப்டனை ஐபிஎல் போட்டியில் வெளிப்படுத்தும் திறமைகளை வைத்துத் தேர்வு செய்யக்கூடாது? விராட் கோஹ்லி ஒரு மோசமான கேப்டன் என்று நான் கூற மாட்டேன்.

ஆனால் ரோகித் சர்மா ஒரு சிறந்த கேப்டன் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவர் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். ஆனால் விராட் கோஹ்லி இதுவரை ஒரு கோப்பையையும் பெற்றதில்லை. 2016 ல் நடந்த ஐபிஎல் சீசனில் மட்டும் பெங்களூர் இறுதிப்போட்டி வரை வந்தது. அது மட்டும் தான் விராட் கோஹ்லியின் அதிகபட்ச சாதனையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading கோலி மோசமான கேப்டனல்ல, ரோகித் சர்மா தான் சிறப்பானவர் : கவுதம் காம்பிர் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை