கேரளாவில் டியூஷன், கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் திறக்க அனுமதி

by Nishanth, Nov 24, 2020, 20:21 PM IST

கேரளாவில் டியூஷன் மற்றும் கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் மற்றும் தொழிற் பயிற்சி மையங்கள் நிபந்தனைகளுடன் திறந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 10 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி புதுச்சேரி, ஆந்திரா உட்பட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டன. கேரளாவில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட மாட்டாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டியூசன், கம்ப்யூட்டர் சென்டர்கள் மற்றும் தொழிற் பயிற்சி மையங்களை திறக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் பரவல் சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் சில தளர்வுகளை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி டியூஷன் சென்டர்கள், கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள், தொழிற்பயிற்சி மையங்கள் மற்றும் நடனப் பள்ளிகளை நிபந்தனைகளுடன் திறக்கலாம். இங்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

முகக் கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது உள்பட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 பேரும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 25 பேரும் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட பல கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

More India News


அண்மைய செய்திகள்