ஆயுர்வேத டாக்டர்கள் ஆபரேஷன் செய்வதா? ஆயுஷ் முடிவுக்கு மருத்துவ சங்கம் எதிர்ப்பு

by Balaji, Nov 24, 2020, 20:23 PM IST

ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளைத் தலைவர் டாக்டர். சி.என்.. ராஜா தலைவர் மற்றும் செயலாளர் டாக்டர் ஏ. கே. ரவிக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது: இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய மருத்துவ கழகத்தின் நம்பகத்தன்மை மற்றும் மேலாதிக்கம் மீது, நாட்டின் ஒட்டுமொத்த நவீன மருத்துவமுறையும் கருத்துவேறுபாடு கொண்டுள்ளது. காரணம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள, ஆயர்வேதா மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடர்பான அறிவிப்பாகும். நவீன ஆங்கில மருத்துவத்தின் கீழ் வருகின்ற, அலோபதி என்ற நவீன ஆங்கிலமுறை மருத்துவரால் மட்டும் செய்யக்கூடிய பல்வேறு அறுவை சிகிச்சைகளை, இனி அயர்வேதம் படிக்கின்ற மருத்துவர்களும் செய்யலாம்.

அவர்களுக்கும் M, S (அறுவை மருத்துவம்) பட்டம் வழங்கப்படும் என்று ஆயுஷ் அமைப்பகம் அறிவித்துள்ளது. மருத்துவ நுட்பவியல் சொற்கள் எல்லாம் காலகாலமாக இருந்துவரும் பொதுவான சொற்கள்தான் என்ற காரணம் சொல்லப்படுகிறது. இவ்வாறு ஒரு மருத்துவ முறையோடு இன்னொரு மருத்துவமுறை கலப்பதை இந்திய மருத்துவ சங்கம் எதிர்க்கிறது. ஒரே நாடு - ஒரே மருத்துவமுறை என்ற கொள்கையும், நாட்டில் உள்ள 600 மருத்துவக் கழகத்திலும் 2030 க்குள் கலப்புமுறை மருத்துவர்களும் "கிச்சடி" மருத்துவமுறையும் உருவாவதை மருந்து தொழிலின் சிக்கலாக மட்டும் பார்க்காமல், நாட்டின் மருத்துவத்துறையின் சிக்கலாகவும், நாட்டு மக்களின் நலனுக்கு எதிரானதாகவும் பார்க்கிறோம்.

அதுமட்டுமல்ல, நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளை கட்டிக்காக்கும் நிலைப்பாட்டுக்கும் அதற்காக ஆயுஷ் அமைச்சகம் அளித்துவரும் உறுதிப்பாட்டுக்கும் எதிரான முடிவான கருதுகிறோம். ஆயுர்வேத மருத்துவர் அறுவை மருத்துவம் செய்யலாம் என்றால் மயக்க மருந்தும், செயல்முறைகளும் ஆயுர்வேதத்தில் உள்ளனவா? என்ற கேள்வி எழுகிறது. நுண்ணுயிரி தொற்று என்பதில் நம்பிக்கையில்லாத "ஆயுஷ்" மருத்துவம் எந்த மருந்தை கொடுத்து தொற்றுக்கட்டுப்படுத்தும்? எனவே ஆயுர்வேத மருத்துவர்கள், நவீன அலோபதி மருத்துவர்களின் துணையின்றி எந்த ஒரு அறுவைசிகிக்சைகளும் செய்ய இயலாது எண்பது புலனாகும். நம் பாரம்பரியம் என்று எதையோ தவறாக புரிந்து வைத்திருப்பதன் விளைவுதான் இது போன்ற அறிவிப்புகளாகும்.

நவீன மருத்துவ தடுப்பூசி மூலம் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தி வருகிறோம். காசநோய் கட்டுப்பாட்டில் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவத்தை மக்களுக்கு அறிவிப்பதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. நீண்ட காலம் பாடுபட்டு கட்டியெழுப்பியுள்ள மருத்துவத்துறையின் உன்னதத்தை பாதுகாக்கும் கடமை இந்திய மருத்துவ சங்கத்திற்கு உள்ளது. மத்திய செயற்குழு ஓர் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறது. 28 மாநில மருத்துவ சங்க கிளைகளும், செயற்குகுழுவை கூட்டும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

You'r reading ஆயுர்வேத டாக்டர்கள் ஆபரேஷன் செய்வதா? ஆயுஷ் முடிவுக்கு மருத்துவ சங்கம் எதிர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை