காயம் காரணமாக ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மாவுக்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 27ம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி டிசம்பர் 4ம் தேதி கான்பெராவிலும், முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17ம் தேதி அடிலெய்டிலும் நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் சிட்னி, அடிலெய்டு, மெல்போர்ன் மற்றும் கான்பெரா ஆகிய இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது.
இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணியின் 32 வீரர்களும் ஆஸ்திரேலியாவில் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் காரணமாக முதலில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. பின்னர் இருவரும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இருவரும் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இஷாந்த் மற்றும் ரோகித் சர்மாவால் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடியும். அங்கு சென்றாலும் இரண்டு வாரங்கள் சுய தனிமையில் இருக்க வேண்டும். இதற்குப் பின் தான் அவர்களால் விளையாட முடியும். இதனால் இருவராலும் முதல் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது. 3வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ரோகித் சர்மாவுக்கு பதிலாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.