நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் செய்த இந்திய வம்சாவளி டாக்டர்

by Nishanth, Nov 25, 2020, 16:53 PM IST

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுரவ் சர்மா என்பவர் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் செய்து சாதனை படைத்துள்ளார்.நியூசிலாந்து நாட்டில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்தில் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த ஜெசிந்தா மேற்கொண்ட தீவிர முயற்சிகள் நல்ல பலனைத் தந்தன.

இதனால் இந்நாட்டில் கொரோனா பாதிப்பு மிக மிகக் குறைவாக இருந்தது. இதனால் பிரதமர் ஜெசிந்தாவுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. எனவே இந்த தேர்தலிலும் அவர் தான் வெற்றி பெறுவார் எனக் கருத்துக் கணிப்புகள் கூறின. அதன்படியே நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஜெசிந்தா மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்.

அவரது கட்சியைச் சேர்ந்த பிரியங்கா என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. நியூசிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். அவரது உறவினர்கள் இப்போதும் சென்னையில் தான் உள்ளனர்.

இந்நிலையில் நியூசிலாந்து தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசம் ஹமீர்பூர் பகுதியைச் சேர்ந்த இவர், மேற்கு ஹாமில்டன் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாண நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது கவுரவ் சர்மா சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில் பதவிப்பிரமாணம் செய்த முதல் நபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More India News


அண்மைய செய்திகள்