கேரளாவின் சர்ச்சை நாயகி எனச் சொல்லும் அளவுக்குச் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் ரெஹானா பாத்திமா. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது ரெஹானா பாத்திமா உள்ளிட்ட சில பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயற்சி செய்தனர். ஆனால், பக்தர்கள் போராட்டங்களால் அவர்களால் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. இதன்பின், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவிப்பதன் மூலம் விமர்சனங்களிலிருந்து தப்பாமல் இருந்து வந்தார் பாத்திமா.
சமீபத்தில் அதேபோல் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார் பாத்திமா. Body Art and Politics என்ற பெயரில் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அரை நிர்வாண கோலத்தில் பாத்திமா இருக்க அவரின் இரண்டு குழந்தைகளும் அவரின் உடல்மீது ஓவியம் வரைந்தனர். மேலாடை இல்லாமல் பாத்திமா அந்த வீடியோவில் குழந்தைகள் முன் இருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து அவர்மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது, சமீபத்தில் ஒரு சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாத்திமா, அதில் மாட்டிறைச்சியை சமைத்தார். அந்த மாட்டிறைச்சிக்கு பெயர் `கோமாதா உலர்த்தியது' பெயர் வைக்க சர்ச்சை உருவானது. அந்த ஷோ முழுவதும் மாட்டிறைச்சியை `கோமாதா உலர்த்தியது' எனத் திரும்ப திரும்ப கூறினார். இதையடுத்து இந்த விவகாரத்தில் வழக்குத் தொடுக்க, அதை விசாரித்த கேரளா ஐகோர்ட் நீதிபதி சுனில் தாமஸ், பாத்திமாவை விளாசினார். `` கோமாதா' சொல் இந்து வேதங்களில் புனிதமான பசுவை குறிப்பது. இந்துக்கள் புண்படும்படி இப்படி செயல்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பல லட்சம் மக்கள் வழிபாடும் `கோமாதா' என்ற வார்த்தையை சமையல் நிகழ்ச்சியில் இறைச்சியின் பெயராக பயன்படுத்துவது அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும். சபரிமலை வழக்கில் ஜாமீனில் இருக்கும் பாத்திமா நிபந்தனைகளை மீறிவிட்டார்" என்று கூறி, இனி இது மாதிரியான மத உணர்வுகளை புண்படுத்தும் பதிவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி, மத உணர்வுகளையும் தூண்டக்கூடிய எதையும் வலைதளங்களில் பதிவிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.