என் குடும்பத்தினரை குறிவைத்து பாஜக தாக்குகிறது.. உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

by எஸ். எம். கணபதி, Nov 28, 2020, 09:32 AM IST

பாஜகவினர் என் குடும்பத்தினரைத் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள். ஆனால், நான் அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போக மாட்டேன் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இரு கட்சிகளுக்கும் மோதல் ஏற்பட்டு, பிரிந்தன.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) உடைத்து மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயன்றது. அந்த முயற்சி தோற்றுப் போனது. பின்னர், காங்கிரஸ்-என்சிபி கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.இதன்பிறகு, சிவசேனாவுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.இந்நிலையில், இந்தியாவில் இதற்கு முன் ஏற்படாத ஒரு கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி ஓராண்டு முடித்துள்ளார் உத்தவ் தாக்கரே.

இதையொட்டி, அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று அவர்கள்(பாஜக) ஓராண்டு காலமாக ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கட்சிக் கொள்கை முக்கியம் என்றாலும், அரசு நிர்வாகம் என்பது அதை விட முக்கியமானது. மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்கிறோம். ஆனால், இந்த கடினமான நோய்த் தொற்று காலத்தில் முகக்கவசம் மற்றும் உடல் கவசம்(பிபிஇ) போன்றவை அளிப்பதை மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதனால், மகாராஷ்டிர அரசுக்கு சுமார் ரூ.300 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து ரூ.38 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி பங்கீட்டுத் தொகை வர வேண்டியிருக்கிறது. அது மட்டுமல்ல. நிசார்கா புயலின் போதும் மத்திய அரசு இந்த மாநிலத்திற்கு உதவவில்லை.

நாங்கள் மத்திய அரசுடன் சுமுகமாகச் செல்ல விரும்புகிறோம். நான் ஒரு போதும் தனிப்பட்ட முறையில் அவர்களை(பாஜக) தாக்கியதில்லை. ஆனால், அவர்கள் எனது குடும்பத்தை வன்மத்துடன் பார்க்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைத்த போது கடுமையாக உழைத்ததால்தான் அவர்களால் வெற்றி பெறமுடிந்தது. ஆனால், இப்போது அவர்கள் என்னையும், எனது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள். நான் அந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து செல்வதில்லை.இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார். மேலும், மத்திய அரசு மீது அடுக்கடுக்காக பல புகார்களைக் கூறினார்.

You'r reading என் குடும்பத்தினரை குறிவைத்து பாஜக தாக்குகிறது.. உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை