தொழிலாளர் சங்க வேலை நிறுத்தத்தின் போது கடையை மூட நிர்ப்பந்தித்தால் யாருக்கும் ஓட்டு கிடையாது என்று ஒரு வியாபாரி தன்னுடைய கடையில் போஸ்டரை எழுதித் தொங்கவிட்டார். இதைப் பார்த்த அரசியல் கட்சியினர் யாரும் அந்த கடையின் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தொழிலாளர் சங்கத்தினர் நேற்று முன்தினம் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
பாஜகவின் பாரதிய மஸ்தூர் சங் (பிஎம்எஸ்) தொழிலாளர்கள் தவிர சிஐடியு, ஐஎன்டியூசி, ஏஐடியுசி உள்பட மற்ற அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டன. இதனால் நாடு முழுவதும் வங்கிகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எங்குமே பாதிக்கப்படவில்லை. ரயில், விமானம் மற்றும் பஸ் போக்குவரத்து, ஆட்டோ, டாக்சிகள் ஆகியவை வழக்கம் போல செயல்பட்டன.
ஆனால் கேரளாவில் இந்த தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டம் 'பந்தா'க மாறியது. கேரளா முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள் உள்பட நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் ஆட்டோ டாக்சிகள் உள்பட எந்த வாகனங்களும் ஓடவில்லை. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை மிக மிகக் குறைவாகவே இருந்தது. இதனால் அரசுப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வங்கிகளிலும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இந்த காரணத்தால் கேரளாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பொதுவாகக் கேரளாவில் இதுபோன்ற போராட்டம் நடைபெறும் போது கடைகளை யாராவது திறந்திருந்தால் போராட்டம் நடத்தும் கட்சியினர் வலுக்கட்டாயமாக அந்த கடையை மூட வைப்பது வழக்கம்.
இந்நிலையில் எர்ணாகுளம் அருகே உள்ள இடப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த வேணு வர்மா என்பவர் தன்னுடைய பலசரக்கு கடையை நேற்று முன்தினம் வழக்கம்போல திறந்தார். ஏற்கனவே கொரோனா காரணமாகப் பல நாட்கள் கடையை மூடியிருந்ததால் அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டிருந்தது. இவர் கடையைத் திறக்க வந்தபோது அப்பகுதியினர் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர். கடையைத் திறந்தால் அரசியல் கட்சியினர் பிரச்சினை ஏற்படுத்துவார்கள் என்று கூறினர். ஆனால் வேணு வர்மா அதைக் கண்டுகொள்ளவில்லை. அரசியல் கட்சியினர் தன்னுடைய கடைப்பக்கம் வராமல் இருக்க அவர் ஒரு திட்டத்தைத் தீட்டினார். கடைக்கு முன்னால் ஒரு கயிறு கட்டி அதில் ஒரு போஸ்டரை எழுதித் தொங்க விட்டார். அதில் என்னுடைய வீட்டில் 6 ஓட்டுகள் உள்ளன. யாராவது என்னுடைய கடையை மூட வந்தால் அந்த கட்சிக்கு எங்களுடைய ஓட்டுகள் கிடைக்காது என்று எழுதி வைத்தார்.
இது குறித்து அறிந்த எந்த அரசியல் கட்சியினரும் அவரது கடை இருக்கும் பக்கமே தலை வைத்துப்படுக்கவில்லை. இந்த யோசனையை அப்பகுதியைச் சேர்ந்த மற்ற கடையினரும் அடுத்த போராட்டத்தில் அமல்படுத்தத் தீர்மானித்துள்ளனர்.