ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல் மற்றும் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ஜிம்மி நீஷம் இருவரும் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் 13 வது சீசனில் பெரிதாக சோபிக்கவில்லை. இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக், மேக்ஸ்வெல்லின் இந்த சொதப்பலான ஆட்டத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார். ஆனால் இந்த இருவரும் கடந்த வெள்ளியன்று தேசிய அணிக்காகச் சிறப்பாக விளையாடி வெற்றியைத் தேடித் தந்தனர். இந்த இருவரும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாட போதிலும், தேசிய அணிக்காக விளையாடும் போது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்துவது அவர்களின் ரசிகர் பட்டாளத்தை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக நிறைய மீம்ஸ்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜிம்மி நீஷம் சமூக வலைத்தளங்களில் மிகச் சுருசுருப்பாகச் செயல்படுபவர். கடந்த வெள்ளியன்று நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இருபது ஓவர் போட்டியில் 24 பந்தில் 48 ரன்களை விளாசி அணியை வெற்றிப் பாதைக்கும் அழைத்துச் சென்றார். இது சம்பந்தமாக வந்த மீம்களில் ஒன்றுக்கு நீஷம், இது வேடிக்கையான ஒன்று, ஆனாலும் அழகானது என்று பதிவிட்டு டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.இந்த மீம்ஸ்க்கு ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல்லும் வேடிக்கையான கமண்ட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.இது நெட்டிசன்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்திய- ஆஸ்திரேலியா இடையே கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 19 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர் களை தெறிக்க விட்டு 45 ரன்களை விளாசினார். ஆனால் இவர் ஐபிஎல் போட்டியில் பெரிதாக ஏதும் சோபிக்கவில்லை. அதிலும் இவர் 2020 ஐபிஎல் தொடரில் ஒரு சிக்சர் கூட விளாசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தேசிய அணிக்காக விளையாடும் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பஞ்சாப் ரசிகர்கள் இடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீஷம் ட்விட்டரில் வெளியிட்ட மீம்ஸ்க்கு, மேக்ஸ்வெல் "இதற்காக நான் ராகுலிடம் மன்னிப்பு கோருகிறேன்" என்று வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளார். நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ஜிம்மி நீஷம் ஐபிஎல் போட்டியில் 5 ல் விளையாடி 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.