நியூசிலாந்துக்கு கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ள பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட பாக்.வீரர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி உள்ளது அந்த அணி 3 டி20 போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
முதல் டி20 போட்டி டிசம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது. போட்டிகளில் விளையாடுவதற்காகக் கடந்த 24ம் தேதி 32 வீரர்கள் உள்பட 53 பேர் நியூசிலாந்து சென்றனர். நியூசிலாந்தில் கொரோனா நிபந்தனைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் இங்கு நோய் பரவல் மிக மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் நியூசிலாந்து சென்றவுடன் பாக்.வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாக். அணியுடன் வந்த அனைவரும் சுய தனிமைக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். எந்தக் காரணம் கொண்டும் அறையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் நியூசிலாந்து நாட்டின் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி பாகிஸ்தான் வீரர்கள் ஓட்டலை விட்டு வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நியூசிலாந்து சுகாதாரத் துறை பாக்.வீரர்களை எச்சரித்தது. அதன் பின்னரும் பலமுறை அவர்கள் ஓட்டல் அறையை விட்டு வெளியே சென்றனர். இதையடுத்து பாக். வீரர்களுக்கு நியூசிலாந்து சுகாதாரத் துறை சமீபத்தில் கடைசி எச்சரிக்கை விடுத்தது.
இனியும் விதிமீறல் தொடர்ந்தால் அனைவரையும் பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பி வைத்து விடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் ஒருவருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இதுவரை கொரோனா பாதித்த பாக். வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான வீரர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற வேண்டிய முதல் டி20 போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.