கேரள அரசு அனுமதி அளித்தால் 30ம் தேதி முதல் சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்தார்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது நடைபெற்று வரும் மண்டலக் கால பூஜைகளில் தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பேரும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தலா 2,000 பேரும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக கேரள அரசின் தலைமைச் செயலர் தலைமையில் கடந்த இரு தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்கலாம் என்று கேரள அரசுக்குச் சிபாரிசு செய்யப்பட்டது. இது தொடர்பாகக் கேரள அரசு பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு சபரிமலையில் இன்று கூறியது: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த மண்டலக் காலத்தில் நேற்று வரை 13,529 பக்தர்கள் தரிசனத்திற்கு வந்துள்ளனர். கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென்று தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு அனுமதித்தால் 30ம் தேதி முதல் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு தயாராக இருக்கிறது.
சபரிமலையில் இதுவரை பக்தர்கள், ஊழியர்கள் உள்பட 46 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சபரிமலையில் மொத்தம் ₹ 2 கோடிக்குக் குறைவாகவே வருமானம் கிடைத்துள்ளது. கடந்த வருடம் இதே நாளில் 45 முதல் 50 கோடி வரை வருமானம் கிடைத்தது. ஆன்லைன் முன்பதிவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தீர்மானித்தால் உடனடியாக ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.