ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தன்னுடைய 4 பெண் குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்று தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.ஹரியானா மாநிலம் குரு கிராமில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நூஹ் பிர்போலி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் குர்ஷித் அகமது. இவரது இரண்டாவது மனைவி பர்மினா (35). இவர்களுக்கு மஸ்கனா (7), மிஸ்கினா (5), அல்சிபா (3) மற்றும் 8 மாதமே ஆன ஒரு பிஞ்சு குழந்தை உள்பட 4 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆண் குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்து வந்தது.
இது தொடர்பாகக் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று குர்ஷித் அகமது அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நடந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தார். நள்ளிரவில் இவர் வீடு திரும்பியபோது கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகத் தட்டியும் அவரது மனைவி கதவைத் திறக்கவில்லை. சந்தேகமடைந்து ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பர்மினா கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.அதிர்ச்சி அடைந்த குர்ஷித் அகமது கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவரது 4 மகள்களும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். உடனே பர்மினாவிடமிருந்து கத்தியைப் பிடுங்கி குர்ஷித், உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு பர்மினாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நூஹ் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று 4 குழந்தைகளின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தான் 4 பெண் குழந்தைகளையும் கழுத்தை அறுத்துக் கொன்று பர்மினா தற்கொலை செய்ய முயற்சித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பர்மினாவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரிடம் போலீசால் விசாரணை நடத்த முடியவில்லை.