திருப்பதியில் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதி : தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் வைகுண்ட துவாரம் (சொர்க்கவாசல்) வழியாக பத்துநாட்கள் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

by Balaji, Nov 29, 2020, 11:21 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பாரெட்டி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கக்கூடிய வைகுண்ட துவாரம் தரிசனத்தில் பத்துநாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேண்டுகோளின் பேரில் நாடு முழுவதுமுள்ள மடாதிபதிகள் மற்றும் பீடாதிபதிகளின் ஆலோசனைகளை படி இந்த ஆண்டு டிசம்பர் 25 -ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி அன்று வைகுண்ட துவாரம் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு அதன் வழியாக பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்கள் எக்காரணத்தைக் கொண்டும் விற்க முடியாத வகையில் இது வரை விற்பனை செய்யப்பட்ட நிலங்கள் மற்றும் தற்போது உள்ள நிலங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சொத்து விபரங்கள் அனைத்தும் தேவஸ்தான இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ளலாம். திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் கொடிமரம், பலிபீடம், மகா துவாரத்திற்கு தங்க தகடுகள் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதையில் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக நிழல் பந்தல் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமலை பசுமை நகரமாக மாற்றப்பட உள்ளது.

இதற்காக 100 முதல் 150 பேட்டரி எலக்ட்ரானிக் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமலை முழுவதும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டையில் நான்கு ஏக்கரில் பத்து கோடி ரூபாய் செலவில் ஏழுமலையான் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கியில் மட்டுமே தேவஸ்தானத்தின் பணம் இனி டெபாசிட் செய்யப்படும் என்றார்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை