சங்பரிவார் தொண்டர்கள் அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்தும், ஆபாச வீடியோக்களை பரப்பியும் என்னுடைய நிம்மதியை கெடுக்கின்றனர் என்று கடந்த இரு வருடங்களுக்கு முன் சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்திய பிந்து அம்மிணி கூறியுள்ளார். பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல வருடங்களுக்கு மேலாக நடந்த இந்த வழக்கில் கடந்த 2018ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உத்திரவிடப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்த உடனேயே சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனம் செய்ய தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். இதைக் கண்டித்து ஆர்எஸ்எஸ், விஎச்பி, சங்பரிவார் உட்பட இந்து அமைப்பினரும், பாஜகவினரும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கேரளாவில் வரலாறு காணாத கலவரம் வெடித்தது. இதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பல இளம்பெண்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய சென்றனர். ஆனால் இந்து அமைப்பினர் அவர்களைத் தடுத்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இளம்பெண்களால் சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து அம்மிணி மற்றும் மலப்புரத்தை சேர்ந்த கனக துர்கா ஆகிய இரண்டு இளம் பெண்கள் சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்தனர். அதிகாலை அதிகாலை 3 மணியளவில் இருவரையும் போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தனர். இது குறித்த தகவல் வெளியானவுடன் கேரளாவில் மீண்டும் பயங்கர கலவரம் வெடித்தது. இவர்கள் இருவரது வீடுகள் முன் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பல நாட்கள் இவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். பிந்து அம்மிணி கோழிக்கோடு பல்கலைக்கழக அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் கூறியது: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தான் நான் சபரிமலைக்கு தரிசனம் செய்ய சென்றேன்.
இதன் காரணமாக கடந்த இரு வருடங்களாக சங்பரிவார் உள்பட இந்து அமைப்பினர் எனக்கு பெரும் தொல்லை கொடுத்து வருகின்றனர். அடிக்கடி போனில் கொலை மிரட்டல் வருகிறது. சமூக வலைதளங்களில் என்னுடையது என்று கூறி சில ஆபாச வீடியோக்களை பரப்பி வருகின்றனர். இது குறித்து போலீசில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சங்பரிவார் அமைப்பினரால் என்னுடைய நிம்மதி பறிபோய் விட்டது. எனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போலீஸ் நிலையம் முன் நான் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.