மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் மனைவி எழுதியதாக முதல்வரின் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ள வெளியிட்டுள்ள கவிதை, தன்னால் எழுதப்பட்டது என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பூமிகா பிர்தாரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கவிதைக்கான அங்கீகாரத்தை தனக்கு வழங்கவேண்டுமென டிவிட்டர் மூலம் அவர் சௌகானை கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் மாமனார் கான்ஷ்யம் தாஸ் மாசனி, கடந்த மாதம் 18ம் தேதி தமது 88வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு நான்கு நாள்களுக்குப் பின்பு முதல்வர் தமது டிவிட்டர் கணக்கில் அஞ்சலி என்று இந்தி கவிதை ஒன்றிலிருந்து சில வரிகளைப் பதிவிட்டிருந்தார். அந்தக் கவிதையை தம் மனைவி சாத்னா சிங் எழுதியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். பாஜி (Bauji) (மரியாதைக்குரிய தந்தை) என்று அதற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது.
பூமிகா பிர்தாரே தமது பதிவில், "நான் உங்கள் உடன்பிறந்தவரின் மகள் போன்றவள். என்னுடைய கவிதையைத் திருடுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? என்னுடைய உரிமையை மீற மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அந்தக் கவிதைக்கு நான் இட்ட தலைப்பு, பாஜி அல்ல; டாடி" என்று கூறியுள்ளார். தமது டிவிட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் 'டேக்' செய்துள்ளார்.
என்னுடைய தந்தைக்கான இறுதிச் சடங்குகளைச் செய்தபோது எப்படி உணர்ந்தேன் என்பதை 'அப்பா' (daddy) என்று தலைப்பிட்டு எழுதியுள்ளேன். மிகுந்த இழப்பின் வேதனையில் அது எழுதப்பட்டது. என்னுடைய போனின் நோட்பேடில் இதை எழுதினேன். எழுதப்பட்ட நாளும் நேரமும் கூட குறிக்கப்பட்டுள்ளது. அதை என்னுடைய குடும்ப வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தேன். அதன் பிறகு போபாலுக்குத் திரும்பி நவம்பர் 21ம் தேதி என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டேன். முதலமைச்சரின் மனைவி சாத்னா சிங் என்னுடைய கவிதையை ஒரு வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்திருப்பதாக என்னுடைய நண்பர் ஒருவர் ஸ்கிரீன்ஷாட் அனுப்பியிருந்தார். அதன்பிறகு அந்தக் கவிதையை தன்னுடைய மனைவி எழுதியிருப்பதாக முதல்வர் கூறியிருப்பது தெரியவந்தது. இதை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன். நான் எழுதிய கவிதைக்கான அங்கீகாரம் எனக்குக் கிடைக்கவேண்டும் என்று பூமிகா கூறியுள்ளார்.