சபரிமலையில் 50 வயதுக்கு குறைவான பெண்களுக்கு தரிசனம் கிடையாது... கேரள போலீஸ் அறிவிப்பால் மீண்டும் சர்ச்சை

by Nishanth, Dec 4, 2020, 10:58 AM IST

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 வயதுக்குக் குறைவான இளம்பெண்களுக்குத் தரிசனம் கிடையாது என்று கேரள போலீஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குத் தரிசனம் செய்யக் கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதன் காரணமாகக் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகச் சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தனர்.

சபரிமலையில் இளம்பெண்கள் வருகிறார்களா என்பதைக் கண்காணிக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆனாலும் சில இளம்பெண்கள் மாறுவேடத்தில் போலீசுக்குத் தெரியாமல் தரிசனம் செய்ய முயற்சித்த சம்பவங்களும் நடந்தன. போலீசார் அவர்களைப் பிடித்துத் திருப்பி அனுப்பி வைத்து வந்தனர். இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இது தொடர்பாகக் கேரள அரசிடம் பல முறை உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டது. காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கும் போது இளம்பெண்களை அனுமதிக்க வேண்டாம் என்று அரசுத் தரப்பில் விளக்கம் கொடுக்கப்படும். ஆனால் இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும் போது இளம்பெண்களை அனுமதிப்பதில் தவறில்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்படும். மாறி மாறி வரும் கேரள அரசுகளின் இந்த முரண்பட்ட விளக்கத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் கடந்த 2018ல் சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனைவரும் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இளம்பெண்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யாமல் இளம்பெண்கள் தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதா என்று கூறி ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தளம் உட்பட இந்து அமைப்பினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து கேரளாவில் கலவரம் வெடித்தது. இதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பல இளம்பெண்கள் தரிசனத்திற்குச் சென்றனர். ஆனால் அவர்களை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பி வைத்தனர். சென்னையைச் சேர்ந்த மனிதி என்ற அமைப்பைச் சேர்ந்த இளம்பெண்களும் சபரிமலையில் தரிசனத்துக்குச் சென்றனர். அவர்களையும் இந்து அமைப்பினர் திருப்பி அனுப்பி வைத்தனர். இதன் காரணமாகக் கேரளாவில் பயங்கர வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து அம்மிணி மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய 2 இளம்பெண்களை போலீசார் பாதுகாப்புடன் சென்று சபரிமலையில் தரிசனம் செய்தனர். இது குறித்த தகவல் வெளியானவுடன் கேரளாவில் மீண்டும் பயங்கர கலவரம் வெடித்தது.

இந்நிலையில் சபரிமலையில் தற்போது மண்டலக் கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கொரோனா காலம் என்பதால் தொடக்கத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் திங்கள் முதல் வெள்ளி வரை 2,000 ஆகவும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செய்யும் இணையதளத்தைக் கேரள போலீஸ் தான் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த இணையதளத்தில் தரிசனத்திற்கு யார் யாரெல்லாம் முன்பதிவு செய்யலாம் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 65 வயதுக்கு மேல் ஆனவர்கள் மற்றும் 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு அனுமதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல 50 வயதுக்குக் குறைவான இளம் பெண்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு இளம் பெண்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ள நிலையில் கேரள போலீஸ் நிலையத்தில் இளம் பெண்களுக்கு அனுமதி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை