கொரோனா பரவலைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் மார்ச் 31 வரை பள்ளிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும்.இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து ஆந்திரா, புதுச்சேரி உள்பட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட எந்த கல்வி நிறுவனங்களும் திறக்கப்படவில்லை. ஜனவரி மாதத்திற்குப் பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க முடியும் என்று அனைத்து மாநிலங்களும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சிவராஜ் சிங் சவுகான் கூறியது: மத்தியப் பிரதேச மாநிலத்தில் மார்ச் 31 வரை பள்ளிகளைத் திறக்க வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்குத் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது.
ப்ராஜெக்ட் ஒர்க்குகளின் அடிப்படையில் இந்த வகுப்புகளில் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படும். 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை வகுப்புகள் நடத்தப்படும். அடுத்த வருடம் ஏப்ரல் முதல் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கப்படும். 10 மற்றும் 12 வரை வகுப்புகளை உடனே தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த இரு வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.