முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்மீது மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக, டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட யோக்ராஜ் சிங்கிடம் செய்தி நிறுவனம் ஒன்று பேட்டியெடுத்தது. அப்போது, இந்திரா காந்தியை கொன்றது போல், மோடியையும் கொல்ல வைத்து விடாதீர்கள் என்று சிலர் போராட்டத்தில் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் கொடுத்த யோக்ராஜ் சிங், ``அவர்கள் எதை விதைத்தார்களோ, அதையே அறுவடை செய்வார்கள். இது உணர்வுகளின் சண்டை. இதனால் இது போன்ற கருத்துக்கள் தெரிவிப்பது தவறில்லை. பாபர், அவுரங்கசீப் மற்றும் பிரிட்டிஷார் போன்ற காட்டுமிராண்டித்தனமான ஆட்சியை விட மோசமான கொடுமைகளை மத்திய அரசு செய்கிறது. மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து இருக்கிறேன். அவர்களின் முகங்கள் பிசாசு போல இருக்கும்.
விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை எல்லைகள் திறக்கப்பட்டால், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், ராணுவம் மற்றும் காவல்துறையை ஒதுக்கிவைத்துவிட்டு பிரதமர் மோடிக்கு தனியாக வர வேண்டும் என நான் சவால் விடுக்கிறேன். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள். யாரவது ஒரு விவசாயி மீதாவது துப்பாக்கியால் சுட்டால், அந்த கணத்தில் இருந்து மோடி அரசின் கவுண்டன் தொடங்கும். அமித் ஷா தனது நண்பர்கள் அதானி மற்றும் அம்பானி ஆகியோரை பஞ்சாபிற்கு முடிந்தால் அழைத்து வரட்டும். அவர்கள் எப்படி திரும்பிச் செல்வார்கள் என்று பார்ப்போம்" என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.