கேரளாவில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது

by Nishanth, Dec 6, 2020, 12:55 PM IST

கேரளாவில் 5 மாவட்டங்களில் 8ம் தேதி முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த மாவட்டங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
கேரளாவில் வரும் 8, 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 5 மாவட்டங்களில் 8ம் தேதியும், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய 5 மாவட்டங்களில் 10ம் தேதியும், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு 4 மாவட்டங்களில் 14ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

இன்னும் 4 மாதங்களில் கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் கேரளாவில் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதையடுத்து கடந்த சில வாரங்களாக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி இடையே பல வார்டுகளில் மும்முனைப் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 5 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் தலைமை அதிகாரி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா காலம் என்பதால் வாக்குப் பதிவுக்கு கூடுதல் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை 3 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் சுய தனிமையில் இருப்பவர்கள் தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் கொரோனா பாதிக்கப்படுபவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் தேர்தல் நடைபெறும் அன்று மாலை 5 முதல் 6 மணி வரை ஓட்டு போடலாம். இவர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து ஓட்டு போட செல்ல வேண்டும். ஓட்டு போடுபவர்கள் முக கவசம் அணிவது, சமூக அகலத்தை கடைபிடிப்பது உள்பட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You'r reading கேரளாவில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை