கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமாரின் உதவியுடன் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் வெளிநாட்டுக்குக் கோடிக் கணக்கில் டாலர்களை கடத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த முக்கிய தலைவரிடம் விரைவில் விசாரணை நடத்தச் சுங்க இலாகாவும், மத்திய அமலாக்கத் துறையும் தீர்மானித்துள்ளது.திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே இந்த தங்கக் கடத்தலில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னாவுடன் நெருக்கமாக இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்வப்னா நடத்திய தங்கக் கடத்தல் உள்பட பல்வேறு முறைகேடுகளில் இவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் தவிரக் கேரள முதல்வர் அலுவலகத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் மேலும் இரண்டு பேருக்கும் முறைகேடுகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளரான ரவீந்திரனிடம் விசாரணை மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்துள்ளது. இந்த வாரம் விசாரணைக்கு ஆஜராகக் கோரி 3வது முறையாக அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.தற்போது ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் ஆகியோர் சுங்க இலாகாவின் கஸ்டடியில் உள்ளனர். இந்நிலையில் சரித்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு திடுக்கிடும் தகவல் சுங்க இலாகாவுக்குக் கிடைத்துள்ளது. தங்கக் கடத்தல் உட்பட முறைகேடாகக் கிடைத்த பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்கு ஸ்வப்னா கடத்தியது ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த கடத்தலுக்கு சிவசங்கரும் உதவி புரிந்துள்ளார்.
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த மிக முக்கிய அரசியல் தலைவர் ஒருவரும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டாலர்களைத் துபாய்க்குக் கடத்தியது சரித்குமாரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை ஸ்வப்னாவும் உறுதி செய்துள்ளார். விரைவில் அந்த அரசியல் தலைவரிடம் விசாரணை நடத்தச் சுங்க இலாகாவும், மத்திய அமலாக்கத் துறையும் தீர்மானித்துள்ளது. அந்த முக்கிய அரசியல் தலைவர் கேரளாவில் பெரும் செல்வாக்கு உள்ள நபர் எனத் தெரிய வந்துள்ளது. இவரிடம் விசாரணை நடத்தினால் கேரள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறுகையில், வெளிநாட்டுக்கு டாலர்களைக் கடத்திய அந்த முக்கிய தலைவர் யார் என்ற விவரத்தைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிடவேண்டும். அவர் ஒரு மிக முக்கிய பொறுப்பில் உள்ள நபர் என்று எனக்குத் தெரியும். அவர் யாரெனத் தெரிந்தால் சிலருக்கு மயக்கம் வந்துவிடும் என்று கூறினார்.