வேளாண் சட்ட மசோதா குறித்து விவசாயிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க, பிரதமரின் "விவசாயிகளின் நண்பன் இயக்கத்தை" உசிலம்பட்டியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று துவக்கினார். இந்த இயக்கத்தின் படி இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் விவசாயிகளை நேரில் சந்தித்து விளக்கமளித்து பயணத்தை துவங்கினார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உசிலம்பட்டியில் துவங்கும் இந்த விவசாயிகளின் நண்பன் இயக்கம் மூலமாக டிசம்பர் 20ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் ஆயிரம் கிராமங்களுக்கு சென்று ஆயிரம் கூட்டங்கள் நடத்தி விவசாயிகளை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். நாம் உற்பத்தி செய்யும் பொருளுக்கு நாமே விலை வைக்க வேண்டும் என்பதை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம் , அதைத் தான் பிரதமர் நேரடியாக விற்பனை செய்யலாம் என சட்டம் இயற்றி செயல்படுத்தியுள்ளார்.
விவசாயிகள் நலனுக்காக பாஜக அரசு பல்வேறு நன்மைகள் செய்திருந்தாலும் நமது பொருளை நாமே விற்பனை செய்ய முடியும் என்பதை மத்திய அரசு சட்டமாக்கியுள்ளது. எந்த இடைத்தரகர்களும் இருக்க கூடாது என்பதற்காகவே இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 6 ஆயிரம் ரூபாய் தமிழகத்தில் 41 லட்சம் பேருக்கு சென்றடைந்துள்ளது. இந்த வேளாண் சட்டத்தை திசை திருப்பி போராட்டத்தை தூண்டும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு விவசாயிகள் பாடம் புகட்ட வேண்டும் என எல்.முருகன் பேசினார்.