இந்திய அணிக்காகத் தனது முதல் ஒரு நாள் போட்டியை விளையாடிய தமிழக இளைஞர் நடராஜன் இந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதேபோல் தனது முதல் சர்வதேச டி20 போட்டியிலும், நான்கு ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன்மூலம் முதல் சர்வதேச டி20 போட்டியிலும் தனது முத்திரையை வலுவாக பதித்தார் நடராஜன். நடராஜன் பங்களிப்பால் இந்திய அணி டி20 தொடரை வெற்றிபெற்றுள்ளது.
இதற்கிடையே, இன்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் தொடரை வென்ற உற்சாகத்தில் வீரர்கள் இருக்கின்றனர். இன்றைய போட்டியில் நடராஜன் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதற்கிடையே, தொடர் நாயகன் வென்ற ஹர்திக் பாண்டியா, தனது டுவிட்டர் பக்கத்தில், ``இந்திய அணியில் உனது தொடக்கம் உனது கடின உழைப்பையும், திறமையும் பேசும். தொடர் நாயகன் விருது பெற தகுதியான ஆள் நீதான்'' என்று கூறி விருதை நடராஜனுக்கு கொடுத்து அதன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இதற்கு முன்பும், நடராஜன் குறித்து பாண்டியா பெருமையாக பேசியது குறிப்பிடத்தக்கது.