கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட சில நிறுவனங்களில் தான் வேக கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி, ஒளிரும் பட்டை வங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தவில்லை. அது பொய்யான, குற்றச்சாட்டு என அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது அரசியல் செய்வதற்காக தெரிகிறது என்றார்.
தமிழகத்தில், கனரக வாகனங்களில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவிகள் , ரிப்ளக்டர் ஸ்டிக்கர்கள், ஸ்பீடு கவர்னர்களை. சில குறிப்பிட்ட நிறுவனங்கள், மற்றும் ஆன்லைனில் மட்டுமே வாங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.இதனால், ஒவ்வொரு லாரிக்கும் சுமார் ரூ. 30 ஆயிரம் முதல் 50 ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது என லாரி உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும், தரச்சான்று பெற்ற 49 நிறுவனங்களில் இந்த கருவிகளை வாங்கிக் கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டும், இந்த உத்தரவை மீறும் வகையில், ஒரு சில நிறுவனத்தில் மட்டுமே வாங்க வேண்டும் என அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களில் வாங்குவதன் மூலம் போக்குவரத்துத்துறை அமைச்சருக்கும், துறை அதிகாரிகளுக்கும் சுமார் 1000 கோடி ரூபாய் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், வரும் 27 ஆம் தேதி முதல் தமிழகத்தில், கால வரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் மேற்கொள்வதாகவும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளை அந்தந்த எல்லையில் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தென்னிந்திய லாரிகள் அசோசியேசன் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் , தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட சில நிறுவனங்களில் தான் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஜிபிஎஸ் கருவி, ஒளிரும் பட்டை வங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தவில்லை. அது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதற்காக, தரச்சான்று பெற்ற 15 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளது.
ஜிபிஎஸ் கருவி, வேகக் கட்டுப்பாடு கருவி, ஒளிரும் பட்டை ஆகியவை நீதிமன்ற வழிகாட்டுதலின் படி தான் நடைமுறைப் படுத்தப்படுகிறது.இந்த நிலையில் வரும் 27 லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருப்பது அரசியல் செய்வதற்காகத்தான். சாலை விதிகளை மீறி அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறியும் கண்காணிப்பு கேமரா கருவி பொருத்த ரூ. 23 கோடிக்குத்தான் டெண்டர் விடப்பட்டுள்ளது ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 900 கோடி எனக் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. யாரோ துண்டு சீட்டில் எழுதிக் கொடுப்பதை வைத்துக் கொண்டு பேசி வருகிறார். இது போன்ற தவறுகள் அதிமுக ஆட்சியில் ஒரு போதும் நடக்காது .
திருச்சியில் டிரான்ஸ் கிங் என்ற நிறுவனத்தின் 30 வெளிமாநில பேருந்துகளைத் தமிழகத்தில் இயக்க அனுமதிக்காக தலா ரூ 3 லட்சம் கேட்டதாகவும், இது தொடர்பாக விஜிலென்சில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுவும் பொய்யான குற்றச்சாட்டுதான் . நாகலாந்து, மத்தியப் பிரதேசம் என வெளி மாநிலங்களில் அனுமதியின்றி இயக்கப்பட்ட பேருந்துகளை கட்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.