பாஜக அலுவலகங்களில் டிச.14ல் முற்றுகை.. விவசாயிகள் போராட்டம் தீவிரம்..

by எஸ். எம். கணபதி, Dec 10, 2020, 09:10 AM IST

மத்திய அரசின் சமரசத் திட்டத்தை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டிச.14ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரமாக்க முடிவு செய்துள்ளனர். அன்று பாஜக அலுவலகங்களை முற்றுகையிடவும் முடிவு செய்திருக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி-ஹரியானா பாதைகளில் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் லட்சக்கணக்கான விவசாயிகள், தங்கள் வாகனங்களுடன் முகாமிட்டுள்ளனர். இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. டெல்லியில் இருந்து ஹரியானா செல்லும் சாலைகள் முடங்கியுள்ளன.

விவசாயிகளின் அழைப்பின் பேரில் கடந்த 8ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பல மாநிலங்களில் பஸ், ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. இதற்கிடையே, விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்றாலும், குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) உறுதி செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு ஒரு வரைவுத் திட்டத்தை அளித்தது.

இந்த திட்டம் குறித்து சிங்கு எல்லைப் பகுதியில் போராடும் விவசாயிகள் நேற்று ஆய்வு செய்தனர். விவசாயிகள் போராட்ட கூட்டு நடவடிக்கை குழுவினர், மத்திய அரசின் திட்டத்தை ஏற்க மறுத்து விட்டனர். மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு என்று பிடிவாதமாக கூறி விட்டனர். இதைத் தொடர்ந்து, டிச.14ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்று கூட்டு நடவடிக்கைக் குழுவினர் முடிவு செய்தனர். டெல்லி சலோ என்ற போராட்டத்தை டிச.14ல் தொடங்குவது என்றும் டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-ஆக்ரா சாலைகளையும் முடக்கி போராட்டம் நடத்தலாம் என்றும் முடிவு செய்தனர். மேலும், அன்று நாடு முழுவதும் மாவட்டங்களில் பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவது என்றும் முடிவு செய்துள்ளனர்.

You'r reading பாஜக அலுவலகங்களில் டிச.14ல் முற்றுகை.. விவசாயிகள் போராட்டம் தீவிரம்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை