வாக்குப் பதிவு தொடங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் ஓட்டு போட்ட அமைச்சரால் சர்ச்சை

by Nishanth, Dec 10, 2020, 16:14 PM IST

கேரளாவில் இன்று 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் மொய்தீன் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் ஓட்டுப் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி முதல் கட்ட தேர்தல் திருவனந்தபுரம் உட்பட 5 மாவட்டங்களில் கடந்த 8ம் தேதி நடந்தது.

2ம் கட்ட தேர்தல் இன்று திருச்சூர், கோட்டயம், பாலக்காடு, எர்ணாகுளம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிறது. 3ம் கட்ட தேர்தல் கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம், மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் 14ம் தேதி நடைபெற உள்ளது. 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கேரளாவில் தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் வாக்குப் பதிவு மந்தமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் கட்ட தேர்தலில் 73.12 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இன்று காலை 7 மணியளவில் 2ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 8 மணி நேரத்தில் வாக்குப் பதிவு 65 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. பெரும்பாலான வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போட்டு வருகின்றனர். கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் மொய்தீன் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பே ஓட்டுப் போட்டது கேரளாவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் மொய்தீன் ஓட்டுப் போடுவதற்காக அவரது சொந்த ஊரான திருச்சூருக்குச் சென்றிருந்தார்.

திருச்சூர் தெக்கே கரை என்ற இடத்திலுள்ள வாக்குப் பதிவு மையத்திற்கு ஓட்டுப் போடுவதற்காக இன்று காலை 6.50 மணியளவில் அமைச்சர் மொய்தீன் சென்றார். 7 மணிக்குத் தான் வாக்குப் பதிவைத் தொடங்க வேண்டும். ஆனால் 6.55 மணியளவில் தேர்தல் அதிகாரி, அமைச்சர் மொய்தீனை ஓட்டுப் போடுவதற்காக அழைத்தார். உடனடியாக உள்ளே சென்ற அவர், வாக்குப் பதிவு நேரம் தொடங்குவதற்கு முன்பே ஓட்டுப் போட்டார். இது தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் சட்டத்தை மீறி 5 நிமிடங்களுக்கு முன் ஓட்டுப் போட்ட அமைச்சர் மொய்தீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காங்கிரஸ், பாஜக உட்பட எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கேரள மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

You'r reading வாக்குப் பதிவு தொடங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் ஓட்டு போட்ட அமைச்சரால் சர்ச்சை Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை