ராஜஸ்தானில் பாஜக வேட்பாளரை காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் கடந்த வாரம் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 4371 பஞ்சாயத்துகளில் நடந்தது. இதில் 4051ல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பாஜக 1835 பஞ்சாயத்துகளையும், காங்கிரஸ் 1718 பஞ்சாயத்துகளையும், ஆர்.எல்.பி. கட்சி 54, மார்க்சிஸ்ட் 16, பகுஜன்சமாஜ் 3 பஞ்சாயத்துகளையும் கைப்பற்றியுள்ளன. மொத்தம் உள்ள 636 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 326ஐ பாஜகவும், 250ஐ காங்கிரசும் கைப்பற்றியுள்ளன. ஆர்.எல்.பி. 10, மார்க்சிஸ்ட் 2 இடங்களில் வென்றுள்ளன.
ஊராட்சி ஒன்றியங்களிலும் பாஜகவே அதிகபட்சமாக 93 இடங்களில் வென்றுள்ளது. துங்கர்புர் மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 27 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பாரதீய பழங்குடி கட்சி(பி.டி.பி) 13 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றன. இந்த கவுன்சிலர்கள் சேர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு பழங்குடி கட்சியின் சார்பில் பார்வதி தேவி போட்டியிட்டார். காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் வாக்களித்தாலே அவர் எளிதில் வெற்றி பெறலாம்.
ஆனால், அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சூர்யா அகாரி என்பவருக்கு காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்களித்து விட்டனர். இதனால், சூர்யா அகாரிக்கு 14 வாக்குகளும், பார்வதிதேவிக்கு 13 வாக்குகளும் கிடைத்தன. இதனால், பழங்குடி கட்சி தற்போது காங்கிரஸ் மீது கோபமடைந்து, கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வேட்பாளரை காங்கிரஸ் ஆதரித்தது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பஞ்சாயத்து தேர்தல்களில் இது போன்ற விசித்திரங்கள் நடைபெறுவது வழக்கம் என்பதால், காங்கிரஸ் மேலிடம் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.