வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இன்று 17வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தீர்வு ஏற்படும் வரை வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.12) 17வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி-ஹரியானா பாதைகளில் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் லட்சக்கணக்கான விவசாயிகள், தங்கள் வாகனங்களுடன் முகாமிட்டுள்ளனர். இதனால், டெல்லியில் இருந்து ஹரியானா செல்லும் சாலைகள் முடங்கியுள்ளன.
விவசாயிகளின் அழைப்பின் பேரில் கடந்த 8ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, விவசாயிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) உறுதி செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அளித்த திட்டத்தையும் விவசாயிகள் போராட்டக் கூட்டு நடவடிக்கை குழு நிராகரித்து விட்டது.
இதைத் தொடர்ந்து, டிச.14ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என்று கூட்டு நடவடிக்கைக் குழுவினர் முடிவு செய்தனர். அன்று முதல் டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-ஆக்ரா சாலைகளையும் முடக்கி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும், பாஜக அலுவலகங்களில் முற்றுகையிடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.இந்நிலையில், டெல்லியைச் சுற்றியுள்ள சிங்கு, திக்ரி, கர்னால், பானிபட், பாதர்பூர், குரு கிராமம், பரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களின் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுடன் முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் ஒரு பிரிவினர் சுப்ரீம் கோர்ட்டில் வேளாண் சட்டங்களை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளனர்.
விவசாயிகள் போராட்ட கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் கூறுகையில், எங்கள் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படாதவரை வீடுகளுக்குத் திரும்பிச் செல்லவே மாட்டோம். போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம் என்றனர்.அதே சமயம், போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய வேளாண் அமைச்சர் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.