ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வந்த மர்ம நோய்க்கு என்ன காரணம் என்பதை எய்ம்ஸ் நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது. தண்ணீர் மற்றும் பாலில் கலந்த நிக்கல் மற்றும் ஈயம் ஆகியவை தான் இந்த மர்ம நோய்க்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள எலுரு என்ற பகுதியில் கடந்த சில தினங்களாக ஒரு மர்ம நோய் வேகமாக பரவி வந்தது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோருக்கு வாந்தி, மயக்கம், உடல் உதறல் ஆகியவை காணப்பட்டன. இதையடுத்து இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விஜயவாடா மற்றும் எலுரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்குத் தான் இந்த நோய் அதிகமாக பாதிக்கப்பட்டது. அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் விஜயவாடா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 45 வயதான ஒருவர் மரணமடைந்தார். நாளுக்கு நாள் இந்த மர்ம நோய் வேகமாக பரவியதை தொடர்ந்து ஆந்திராவில் மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டது. ஆந்திர மாநில அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
நோய்க்கு காரணம் குடிநீர் மற்றும் பாலில் நிக்கல் மற்றும் ஈயம் அடங்கிய தாதுப்பொருள் கலந்திருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது இன்னொரு தகவலும் வந்துள்ளது. ஐதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் எலுரு மக்கள் உட்கொண்ட நீர், இரத்தம், உணவு மாதிரிகளை ஆய்வு செய்ததில், அரிசியில் கலந்திருக்கும் பாதரசமும் காய்கறிகளில் இருந்த அதிக அளவிலான பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் தான் காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர்.