மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில்மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது ரயில் மறியலை கைவிட்டு, டெல்லியை நோக்கி பேரணி (டெல்லி சலோ) என்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்றும் பேசியிருக்கிறார். ``கடந்த 17 நாட்களில் 11 விவசாயிகள் போராட்டத்தில் இறந்துள்ளனர். இதற்கான சான்றாக ஊடக அறிக்கை உள்ளது. சட்டங்களை ரத்து செய்ய விவசாயிகள் இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். ஐந்து சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. ஆனாலும் இதுவரை உடன்பாடும் எதுவும் எட்டப்படாமல் போராட்டம் தொடர்கிறது" எனக் கூறியுள்ளார்.