விஜய்யின் மாஸ்டர் படத்தைப் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜின் நிறுவனம் தான் கேரளாவில் வெளியிடப் போகிறது. விஜய்யின் முந்தைய படமான 'பிகிலை'யும் பிரித்விராஜின் நிறுவனம் தான் கேரளாவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என முன்னர் கூறப்பட்டது. ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாகத் தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பொங்கல் முதல் தியேட்டர்கள் திறக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. ரசிகர்களும் தியேட்டர்கள் திறப்பதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனவே பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீசானால் அது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக வருமானம் இன்றி தவித்துக் கொண்டிருக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.விஜய்க்கு கேரளாவிலும் பெருமளவு ரசிகர்கள் உள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் படங்களை விட விஜய்யின் படங்கள் அதிக தியேட்டர்களில் ரிலீசாவது உண்டு. விஜய்யின் கடைசியாக வெளியான பிகில் படம் கேரளாவில் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி சாதனை படைத்தது. அதற்கு முன்பு கேரளாவில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி படங்கள் கூட இந்த அளவுக்கு அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது கிடையாது.
இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தை இம்முறையும் நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து கேரளாவில் வெளியிடுகின்றனர். கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. தியேட்டர் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜனவரி மாதம் முதல் கேரளாவிலும் தியேட்டர்கள் திறக்கப்படும் என கருதப்படுகிறது. விஜய்யின் மாஸ்டர் படம் வெளியானால் கேரளாவிலும் சினிமா ரசிகர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.