கேரளாவில் இன்று உள்ளாட்சி தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சத்திற்கு இடையேயும் அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 8ம் தேதி திருவனந்தபுரம் உள்பட 5 மாவட்டங்களில் முதல் கட்டமாகவும், 10ம் தேதி திருச்சூர், பாலக்காடு உள்பட 5 மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடந்தது. இந்நிலையில் இன்று கண்ணூர், கோழிக்கோடு உட்பட நான்கு மாவட்டங்களில் இறுதிக் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் கோரோனோ நோய் பரவல் தற்போது தீவிரமாக உள்ளது.
ஆனாலும் கடந்த இரு கட்டங்களில் நடந்த தேர்தலில் 73 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாயின. கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் இந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் மிகக் குறைவாகவே இருக்கும் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் கருதின. ஆனால் கொரோனா அச்சத்திற்கு இடையேயும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இறுதிக் கட்ட தேர்தலிலும் வாக்குப் பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போட்டு வருகின்றனர்.
வாக்குப் பதிவு தொடங்கிய முதல் 3 மணி நேரத்திலேயே 24 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், அமைச்சர்கள் ஜலீல், ஜெயராஜன், சசீந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்த உள்ளாட்சித் தேர்தலில் இடது முன்னணி சரித்திர வெற்றி பெறும் என்று ஓட்டு போட்ட பின்னர் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து இடது முன்னணியை பலவீனப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அந்த திட்டம் பலிக்காது என்பது 16ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது அனைவருக்கும் தெரியும் என்று அவர் மேலும் கூறினார்.