சபரிமலையில் போலீசார் உட்படக் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் மகர விளக்கு காலம் வரை கூடுதல் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.சபரிமலையில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 15ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள் 16ம் தேதி முதல் மண்டலக் கால பூஜைகள் தொடங்கின.
41 நாள் நீளும் மண்டலக் காலம் வரும் 26ம் தேதி நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. அன்று இரவு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடையும். 2 நாள் இடைவெளிக்குப் பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். ஜனவரி மாதம் 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகர விளக்குப் பூஜை நடைபெறும். அன்று மாலை சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். ஜனவரி 20ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். 19ம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழக்கமாக மண்டல, மகரவிளக்கு காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்வார்கள். ஆனால் இவ்வருடம் கொரோனா பரவல் காரணமாகப் பக்தர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் மண்டல பூஜைக்கு நடை திறந்த போது வார நாட்களில் தினமும் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கூடுதல் பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்ததைத் தொடர்ந்து வார நாட்களில் 2,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாகச் சபரிமலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் உட்பட 286 பேருக்கு கொரோனா பரவியது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் போலீசார் ஆவர். இதையடுத்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது குறித்து ஆலோசிப்பதற்காகத் திருவனந்தபுரத்தில் கேரள தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் அவசரக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சபரிமலையில் ஊழியர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து மகரவிளக்கு காலம் வரை பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் சபரிமலை நிலக்கல், சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.