டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நர்சுகள் மீது இன்று போலீசார் திடீர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தடியடியில் ஏராளமான நர்சுகள் காயமடைந்தனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக நர்சுகளுக்கு பணிச்சுமை கடுமையாக அதிகரித்துள்ளது.
கடந்த சில வருடங்களாகச் சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. டாக்டர்களுக்கு அளிக்கப்படும் எந்த முன்னுரிமையும் இங்கு நர்சுகளுக்கு அளிக்கப்படுவதில்லை. இதையடுத்து சம்பள உயர்வு உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்திருந்தனர். இந்நிலையில் இந்த போராட்டத்தை முறியடிப்பதற்காக மத்திய அரசு தற்காலிக ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வந்தது.

இதையடுத்து நேற்று மாலை முதல் நர்சுகள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நர்சுகள் போராட்டத்தைத் தொடங்கினர். இதில் ஆயிரக்கணக்கான நர்சுகள் கலந்து கொண்டனர். இதனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, கொரோனா சிகிச்சைப் பிரிவு உட்பட பெரும்பாலான பகுதிகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.இந்நிலையில் இன்று காலை திடீரென எய்ம்ஸ் வளாகத்திற்குள் போலீசார் நுழைந்து போராட்டம் நடத்தி வந்த நர்சுகள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தடியடியில் ஏராளமான நர்சுகளுக்கு காயம் ஏற்பட்டது. போராட்டம் நடத்திய நர்சுகளை போலீசார் வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.















