டெல்லி: அதானி குழுமத்திடம் மட்டுமே இனி உணவுப் பொருள்களை வாங்க முடியும் என்ற தகவலால் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட்டை அடுத்த ஜோன்தான் காளன், நவுல்தா என்னும் கிராமங்களில் விவசாயிகளிடம் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து சேமிக்கும் நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களை அதானி குழுமம் கட்டி வருகிறது. இந்த நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்கள் பல லட்சம் டன் தானியங்களைச் சேமிக்கும் திறன் கொண்டது. இதேபோன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா என்னுமிடத்திலும் அதானி குழுமம் அமைத்துள்ளது.
இதற்கிடையே, உணவுப் பொருள்களை வாங்க நுகர்வோரும் இனி அதானி குழுமத்தை நாட வேண்டும். இது நீண்ட நாளைக்குச் சேமித்து வைத்து அதிக விலை கிடைக்கும் சமயங்களில் விற்கும் நிலைக்கு வழிவகுக்கும் என்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளிடமும் இந்தத் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்ட விளக்கத்தில், விளைபொருள்களைச் சேமிப்பதற்கான நவீன தானிய களஞ்சியங்களை மட்டுமே கட்டி வருகிறோம். நாங்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்றும் விளைபொருள்களுக்கான விலையை எவ்வளவு நிர்ணயிக்க வேண்டும் என்பதும் எங்களிடம் இல்லை. இந்திய உணவுக் கழகத்துக்கு விளைபொருள்களைச் சேமிப்பதும் அதைக் கொண்டுபோய் சேர்ப்பதும் மட்டும்தான் எங்கள் வேலை என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இந்திய உணவுக் கழகம், விளைபொருள் தானியங்களைக் கொள்முதல் செய்வது, அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்வது அனைத்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வரும். பூச்சிகள் மற்றும் இதர தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவே இந்த நவீன தானிய சேமிப்புக் களஞ்சியம் என்று தெரிவித்துள்ளது.