டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 24வது நாளை எட்டியுள்ளது. சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.19) 24வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தால் கார்பரேட் நிறுவனங்களுக்குத்தான் லாபம் என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை(எம்.எஸ்.பி) உறுதி செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அளித்த திட்டத்தையும் விவசாயிகள் போராட்டக் கூட்டு நடவடிக்கை குழு நிராகரித்து விட்டது.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இருக்கிறது. இதில் சுப்ரீம் கோர்ட், விவசாயிகளின் ஜனநாயகப் போராட்டத்தைத் தடை செய்ய முடியாது என்று கூறியுள்ளது.
இந்நிலையில், டெல்லி சிங்கு எல்லையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டுப் போராடி வருகின்றனர். அவர்கள் அங்கேயே மாதக்கணக்கில் தங்குவதற்கு ஏற்ப வசதிகளையும் செய்து வருகின்றனர். டிராக்டர்களின் மேல் சோலார் பேனல்கள் அமைத்து, சூரிய சக்தி மூலம் செல்போன்களை சார்ஜ் செய்கிறார்கள். அந்த பகுதியில் ஒரு மினி லைப்ரரியை ஏற்படுத்தியுள்ளனர். போராடும் விவசாயிகள் அங்குச் சென்று புத்தகங்கள் படித்து கொள்ளலாம். அதே போல், உணவுக் கூடங்கள், சலவையகம், மசாஜ் சென்டர் உள்பட அனைத்து வசதிகளையும் அந்த பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும், பத்திரிகைகளில் தங்களின் போராட்டம் குறித்த செய்திகளைச் சரியாக வெளியிடுவதில்லை என்றும், அரசுக்கு ஆதரவாகப் போராட்டத்தைத் திசை திருப்புகிறார்கள் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்காக, விவசாயிகளில் ஒரு குழுவினர், ட்ரோல் டைம்ஸ் என்ற பெயரில் திடீர் பத்திரிகையை(நியூஸ் லெட்டர்) அச்சிட்டு விநியோகித்தனர். இதற்கிடையே, போராடும் விவசாயிகள் அந்தப் பகுதி மக்களிடம் நட்பாகப் பழகி விட்டனர். படித்த விவசாயிகள் சிலர், குடிசைப் பகுதிகளுக்குச் சென்று குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர்.இப்படியாக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்க, பிரதமர் மோடியோ தினம் ஒரு நிகழ்ச்சியில், வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என்றும் போராட்டத்தை எதிர்க்கட்சியினர்தான் தூண்டி விடுகின்றனர் என்றும் பேசிக் கொண்டிருக்கிறார்.