அமெரிக்காவில் மாடெர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கொடுத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் இது வரை 7 கோடி பேருக்குப் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் ஒரு கோடியே 78 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. இந்நோய்க்கு 3 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஏற்கனவே அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு அனுமதி அளித்திருந்தது. அந்த தடுப்பூசி தற்போது சுகாதாரப் பணியாளர்கள் உள்படப் பலருக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாடெர்னா நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தற்போது அந்நாட்டு உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்திருக்கிறது. இந்த தடுப்பூசியும் உடனடியாக பயன்பாட்டுக்கு வருகிறது. இது குறித்து அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனாவுக்கான மாடெர்னா தடுப்பூசி இப்போது கிடைக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். பைசர் மற்றும் பயொடெக், மாடெர்னா என்று அடுத்தடுத்து பல கம்பெனிகளின் கொரோனா தடுப்பூசிகள் வந்து விட்டதால், கொரோனா தொற்று பரவல் ஓராண்டுக்குள் கட்டுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.