ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு வர காலதாமதம் ஆகும் என்பதாலும், இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாலும் சபரிமலையில் இன்று முதல் 5,000 பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இதுவரை தொடங்கவில்லை. பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது வார நாட்களில் 2,000 பக்தர்களும், சனி ஞாயிறு ஆகிய நாட்களில் 3,000 பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 24 மணி நேரத்திற்குள் கொரோனா ஆண்டிஜன் பரிசோதனையும் நடத்தியிருக்க வேண்டும். இந்நிலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நெருங்கி வருவதால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், டிச.20 (இன்று) முதல் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும், பக்தர்கள் அனைவரும் ஆன்டிஜன் பரிசோதனைக்கு பதிலாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. சபரிமலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் 26ம் தேதிக்கு பின்னர் சபரிமலை வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே கேரள அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று முதல் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு இந்த பரிசோதனை நடத்த வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்துவதற்கு குறைந்தது 2,500 ரூபாய்க்கு மேல் செலவாகும்.
சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக நிலக்கல் என்ற இடத்தில் ஏற்கனவே ஆண்டிஜன் பரிசோதனைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பரிசோதனை முடிவு கிடைப்பதற்கு காலதாமதம் ஆகும். இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால் உடனடியாக கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கேரள அரசு முடிவெடுத்துள்ளது. 24 மணி நேரத்திற்குள் இந்த பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்பதால் பக்தர்கள் தாங்கள் புறப்படும் இடத்திலிருந்தே பரிசோதனை எடுத்து வரவும் முடியாது. எனவே இது தொடர்பாக நாளை உயர்நீதிமன்றத்தை அணுகவும் கேரள அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சபரிமலையில் உடனடியாக கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.