இளம் நடிகையுடன் சில்மிஷம் வாலிபர்களின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டது

by Nishanth, Dec 20, 2020, 11:22 AM IST

கொச்சியில் வணிக வளாகத்தில் வைத்து பிரபல மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களின் புகைப்படங்களை கொச்சி போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். பிரபல மலையாள இளம் நடிகையான அன்னா பென் தன்னுடைய தங்கை மற்றும் தாயுடன் கடந்த 3 நாட்களுக்கு முன் கொச்சியில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்திற்கு சென்றார். அங்குள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டில் அன்னா பென் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, 2 வாலிபர்கள் அவரிடம் நெருங்கி வந்து சில்மிஷத்தில் ஈடுபட்டனர். நடிகை சுதாரிப்பதற்குள் இருவரும் அங்கிருந்து மாயமாகி விட்டனர்.

இது குறித்து மறுநாள் அன்னா பென் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக போலீசில் அவர் புகார் செய்யவில்லை என்றாலும் கொச்சி போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடந்த வணிக வளாகத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பரிசோதித்ததில் 2 வாலிபர்கள் நடிகையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரது புகைப்படங்களை சேகரித்த போலீசார் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். இதற்கிடையே நடிகையின் தாயிடம் போலீசார் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் இருந்த வாலிபர்கள் தான் தன்னுடைய மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர் என்பதை அவர் உறுதி செய்தார். இதையடுத்து அந்த போட்டோவை வைத்து இருவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர்கள் முகக்கவசம் அணிந்திருந்ததால் உடனடியாக அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது கொரோனா பரவல் இருப்பதால் கேரளாவில் அனைத்து வணிக வளாகங்களுக்கும் செல்பவர்களின் பெயர், தொலைபேசி உட்பட விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வாலிபர்கள் இருவரும் விவரங்களை கொடுக்காமல் கூட்டத்திற்கு இடையே புகுந்து சென்று விட்டனர்.

இதனால் அவர்களது விவரங்கள் எதுவும் போலீசுக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்களது புகைப்படங்களை வெளியிட போலீசார் தீர்மானித்தனர். இதன் படி இருவரது புகைப்படங்களையும் போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர். இருவருக்கும் சராசரியாக 24 வயது இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இருவரும் வணிக வளாகத்தில் இருந்து நேராக எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றனர். ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் சேகரித்துள்ளனர். ரயில் நிலையத்திற்கு சென்றதால் அவர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இவர்கள் குறித்த முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளதால் விரைவில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

More Cinema News


அண்மைய செய்திகள்