டெல்லியில் சீக்கியர்களின் வழிபாட்டு தலமான ரகாப் கஞ்ச் குருத்வாராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று(டிச.20) திடீரென சென்று வழிபாடு நடத்தினார். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.20) 25வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தால் கார்பரேட் நிறுவனங்களுக்குத்தான் லாபம் என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன.
உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது. பேச்சுவார்த்தை நடைபெறாததால் இழுபறி நீடித்து வருகிறது. விவசாயிகளின் போராட்டத்தில் பஞ்சாப் சீக்கிய விவசாயிகளே பெரும்பான்மையினராக உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் வசிக்கும் சீக்கியர்களும் மோடி அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சீக்கியர்களின் விரோதியாக மோடியையும், அமித்ஷாவையும் சித்தரித்து சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள், செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலையில் திடீரென டெல்லியில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டு தலமான ரகாப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு சென்றார். குரு தேஜ்பகதூர் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இந்த குருத்வாரா அமைந்திருக்கிறது. அங்கு சென்ற பிரதமர் மோடி, சீக்கியர்களை போல் தலைப்பாகை அணிந்து கொண்டு, வழிபாடு நடத்தினார். அதன்பிறகு அவர் கூறுகையில், நான் இந்த குருத்வாராவில் வழிபட்டதில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களை போல், குரு தேஜ்பகதூரின் இரக்கத்தின் மீது நான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.