சினிமா படம் எடுப்பது ஒரு பெரிய வேலை என்றால் அதற்கு டைட்டில் வைத்தும் ஒரு பெரிய வேலைதான். சில படங்களின் டைட்டில் வைக்கும்போது எதிர்ப்பு வருகிறது, இன்னும் சில டைட்டில்கள் வைக்க அனுமதி கிடைப்பதில்லை. தமிழில் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி படத்துக்கு முதலில் சண்டியர் என டைட்டில் வைக்கப்பட்டது. அதற்கு குறிப்பிட்ட சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த டைட்டில் மாற்றப்பட்டு விருமாண்டி என வைக்கப்பட்டது. விஜய் நடித்த படமொன்றுக்கு காவல் காரன் என வைக்கப்பட்டது. அதற்கு ஒரு பட நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த டைட்டிலில் எம்ஜிஆர் நடித்த படம் ஒன்றும் உள்ளது. இதையடுத்து விஜய் படத்துக்கு காவலன் என டைட்டில் மாற்றம் செய்யப்பட்டது. தனுஷ் நடித்த படமொன்றுக்கு திருவிளையாடல் என்று வைக்கப்பட்டது.
அதற்கு சிவாஜி மன்றத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த டைட்டில் திருவிளையாடல் ஆரம்பம் என மாற்றப்பட்டது. தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் என பெயரிடப்பட்டிருக்கிறது. அதற்கும் சிவாஜி மன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சில சமயம் படங்களில் பேசப்படும் பிரபல வசனங்கள் மற்றொரு பட டைட்டிலாக வைக்கப்படுகிறது. ரஜினி பேசிய வசனங்கள் என் வழி தனி வழி, கதம் கதம் போன்றவை வேறு படங்களுக்கு டைட்டிலாக வைக்கப்பட்டிருக்கிறது. வடிவேலு பேசிய நானும் ரவுடிதான், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பன்றிக்கு நன்றி சொல்லி போன்ற வசனங்கள் வேறு படங்களுக்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. தமிழில் மட்டுமல்ல இந்தி திரையுலகிலும் இதுபோன்ற டைட்டில் பிரச்னை உண்டாகிறது.
விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இந்தியில் ரன்பீர் கபூர் நடிக்கும் புதிய படம் இயக்குகிறார். அப்படத்துக்கு டெவில் என பெயரிட்டார். அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. 2014ம் ஆண்டு சல்மான்கான் நடித்த கிக் என்ற இந்தி படத்தில் சல்மான் கதாபாத்திரம் டெவில் என சித்தரிப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது கிக் பட தயாரிப்பாளர்கள் டெவில் என்ற டைட்டிலை தங்களது 2ம்பாக படத்துக்கு வைக்க முடிவு செய்திருப்பதால் சந்தீப் ரெட்டிக்கு அந்த டைட்டில் வைக்க அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து சந்தீப் ரெட்டி தன் படத்துக்கு அனிமல் என பெயர் மாற்றம் செய்திருக்கிறார். இதுவொரு கேங்ஸ்டர் படமாக உருவாகவிருக்கிறது. ரன்பீர் கபூர் சமீபத்தில் பிரம்மாஸ்த்ரா, ஷம்ஷேரா ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடித்தார்.