நாடு முழுவதும் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 30 கோடி மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொடிய ஆட்கொல்லி வைரஸ் கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை ஒரு கோடி பேருக்குப் பாதித்திருக்கிறது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
தற்போது பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அடுத்த மாதத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது.இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முதல் கட்டமாக 30 கோடி பேரைத் தேர்வு செய்துள்ளோம். மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், 50வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குக் கீழ் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அடையாளம் கண்டிருக்கிறோம்.
தடுப்பூசி போடும் பணிக்காகக் கடந்த 4 மாதங்களாக 260 மாவட்டங்களில் சுமார் 20 ஆயிரம் பேருக்குப் பயிற்சி அளித்துள்ளோம். இவர்களுக்குக் கீழ் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுவார்கள். தடுப்பூசி போடும் பணிக்கு மாநில, மாவட்ட, வட்டார அளவில் குழுக்கள் அமைத்து தேவையான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்.இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குத் தொற்று பாதித்திருந்தாலும் 3 லட்சம் பேர்தான் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 95 சதவீதம் பேர் குணம் அடைந்து விட்டனர்.
இவ்வாறு ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.