மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 25 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பிடம் மத்திய முகமை நிறுவனம் ஒன்று மின்னஞ்சல் மூலம் வெளிநாட்டு நிதி விவரங்களை சமர்ப்பிக்க கோரியுள்ளது.
இது தொடர்பாக பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் பிரதிநிதிகள் கூறுகையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை களைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த வகையில், தற்போது NRI-நிதி குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் நல் உள்ளம் கொண்ட சிலர் வியர்வையை சிந்தி சம்பாதித்த பணத்தில் சிறு பங்கை NRI-க்கு கொடுத்து எங்களது போராட்டத்திற்கு உதவி வருகின்றனர். இதில் அரசுக்கு என்ன சிக்கல். எங்கள் மக்களும் எங்களை ஆதரித்து வருகின்றனர்.
மத்திய அரசின் கீழ் செயல்படும் முகமை ஒன்று, எங்கள் அமைப்பு கணக்கு வைத்துள்ள வங்கியின் மூலமாக எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில், வெளிநாட்டிலிருந்து பெற்ற நன்கொடைகள் தொடர்பான பதிவு விவரங்களை நாங்கள் கொடுக்க வேண்டுமென்றும் இல்லையெனில் அவை திருப்பி அனுப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அரசு சார்பற்ற அமைப்புகளின் நிதி விவரங்களை மத்திய அரசு கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது