கர்நாடகாவில் இன்று(டிச.23) முதல் ஜன.2ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது. அதனால், லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கு நேற்று(டிச.22) முதல் 31ம் தேதி வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. அதே போல், பெங்களூருவுக்கு வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கு புதிய வகை கொரோனா பாதிப்பா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியதாவது: இங்கிலாந்தில் இருந்து கடந்த வாரம் கர்நாடகாவுக்கு வந்து சேர்ந்த பயணிகளை கண்டறிந்து சோதனை செய்து வருகிறோம். கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்கும் பொருட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இன்று(டிச.23) முதல் வரும் ஜனவரி 2ம் தேதி வரை தினமும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும். தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். எனவே, இரவில் தேவையில்லாமல் நடமாடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.