கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் உடலில் 6 முதல் 12 மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று இந்த தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு விரைவில் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என கருதப்படுகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய நுண்ணுயிரி ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிறுவனம் கோவாக்சின் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா உட்பட ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பு மருந்து குறித்து அந்த நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: கோவாக்சின் தடுப்பு மருந்தை பயன்படுத்துவதின் மூலம் எந்த எதிர்வினைகளும் ஏற்பட வாய்ப்பு இல்லை. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. கடந்த மாதத்தில் கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3வது கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த தடுப்பு ஊசி செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டது.
யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. கோவாக்சின் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்பவர்களில் 6 முதல் 12 மாதம் வரை நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். இவ்வாறு அந்த நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவனமும், அமெரிக்க நிறுவனமான ஓக்யூஜென்னும் இணைந்து கொரோனா தடுப்பூசிக்கான ஆராய்ச்சியை நடத்தி வருகின்றன. இந்தப் பணிகள் தொடரும் என்று இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் உள்ள பிரபல பயோ பார்மசூட்டிக்கல் நிறுவனமான ஓக்யூஜென், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இதுதொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.