Saturday, Feb 27, 2021

இந்தியாவின் முதல் கிறிஸ்துமஸ் கேக் : சில ருசிகர தகவல்கள்

by Balaji Dec 24, 2020, 14:40 PM IST

கிறிஸ்மஸ் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது இயேசு கிறிஸ்துவும் கூடவே கேக்- கும்.உலகம் முழுவதும் கேக் இன்றி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இல்லை. இந்தியாவில் குறிப்பாகக் கேரளாவின் தலச்சேரி கேக், பாண்டிச் சேரி கேக்குகள் கோவாவின் ரோஜா வாசனை கொண்ட கேக்குகள் அலகாபாத்தின் தனித்துவமான மசாலா கேக் ஆகியவை பிரபலமானவை.இதன் பிரபலத்திற்கு கேக்குகளில் சுவை மட்டும் காரணம் அல்ல. அவற்றின் கலாச்சார தோற்றம் மற்றும் வரலாறு ஆகியவையும் ஒரு காரணம் .

சரி அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இந்தியாவின் முதல் கிறிஸ்துமஸ் கேக் யாரால் எங்குத் தயாரிக்கப்பட்டது தெரியுமா?1880ல் வடக்கு கேரளாவின் சிறிய கடற்கரை நகரமான தலசேரியில் இருந்து எகிப்தில் பிரிட்டிஷ் துருப்புக்களுக்குப் பால், தேநீர் மற்றும் ரொட்டியைத் தயாரித்து அனுப்பிக் கொண்டிருந்தார் ஒரு தொழிலதிபர். அவரது பெயர் மாம்பள்ளி பாபு .

அவர் பர்மாவிலிருந்து திரும்பி வந்தவர், அங்கு ரொட்டி, பிஸ்கட் தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொண்டார். அப்பொழுது, நாட்டில் வேறு ஒரு பேக்கரி இருந்தது, அதில் தயாராகும் பண்டங்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு மட்டுமே விற்கப்படும் இந்தியர்களுக்கு எதுவும் கிடைக்காது. ஆக மலையாளிகளுக்கு இந்த பேக்கரி பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் பாப்பு தனது பேக்கரியை துவக்கினார்.பாபு தனது பேக்கரியை அமைத்து, அதற்கு ராயல் பிஸ்கட் பேக்டரி என்று பெயரிட்டார். கிட்டத்தட்ட 40 வகையான பிஸ்கட், ரஸ்க், ரொட்டி மற்றும் பன் போன்றவற்றை அவர் தயாரிக்கத் தொடங்கினார்.ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு ஈஸ்ட் இறக்குமதி செய்யத் தொடங்கும் வரை உள்ளூரில் உள்ள கள்ளைப் பயன்படுத்திப் புளிக்க வைத்து
ரொட்டி மாவு தயாரிக்கப்பட்டது.

1883 ஆம் ஆண்டில், கிறிஸ்மஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, முர்டோக் பிரவுன் என்ற பிரிட்டிஷ்காரர். (இவர் இந்த பகுதியில் ஏலக்காய் தோட்டம் ஒன்றைத் துவங்கி இருந்தார்) பாபுவின் பேக்கரிக்கு வந்தார். தனது ஜட்காவை (வண்டி) இறக்கி, இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்த ரிச்பிளம் கேக்குடன் பேக்கரிக்குள் நுழைந்தார். இந்தாருங்கள் இதைச் சாப்பிட்டுவிட்டு இதே மாதிரி கேட்டுச் செய்ய முடியுமா என்று கேட்க பாபு தயக்கமின்றி ஒப்புக்கொண்டார். . இந்த கேக் தயாரிப்பில் ஒரு வரலாற்றைப் படைக்கப் போகிறோம் என்று அப்போது அவருக்குத் தெரியாது.

இந்த கேக் எப்படித் தயாரிக்கப்பட்டது என்பது குறித்து 10 நிமிடம் லெக்சர் எடுத்தார். அதை அரை குறையாகக் காதில் வாங்கிக் கொண்ட பாபு அதற்கு முன்னரே கேக்கை எப்படித் தயாரிப்பது என்று மனதிற்குள் ஓட விட்டுக் கொண்டிருந்தார்.பிரவுன் அவரிடம் கோகோ, பேரிச்சம்பழம், திராட்சையும் மற்றும் பிற உலர்ந்த பழங்களும் உள்ளடக்கிய ஒரு பையைக் கொடுத்து இதை வைத்துத் தயாரிக்கச் சொன்னார். மேலும் கிறிஸ்மஸ் கேக்கிற்காக ஒரு வகை பிரெஞ்சு பிராந்தியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

ஆனால் அச்சு வாங்கினார், மலபார் கடற்கரையில் உள்ள பண்ணைகளிலிருந்து சிறந்த மசாலா பொருள்கள், மற்றும் முந்திரி, ஆப்பிள் மற்றும் உள்ளூரில் விளைந்த கதளி ரக வாழைப்பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயத்தைப் பயன்படுத்தி புதுவித கேக்கை தயாரித்தார். டிசம்பர் 20, 1884 இல், பாபு தான் தயாரித்த கேக்கை பிரவுனுக்கு வழங்கினார்.பிரவுன் அதை வாங்கி ருசித்தபோது மிகவும் அருமையான சுவையாக இருந்தது கண்டு மகிழ்ந்தார். ​​ "தன்னிடம் இருந்த மிகச் சிறந்த கேக்குகளில் ஒன்று" என்று சான்றளித்து மேலும் ஒரு டஜன் கேக்குகள் ரெடி பண்ணுப்பா என்று ஆர்டர் செய்தார்!

இப்படி ஆரம்பித்துத்தான் இந்தியாவில் கிறிஸ்மஸ் கேக் பிரபலமடைந்தது.

You'r reading இந்தியாவின் முதல் கிறிஸ்துமஸ் கேக் : சில ருசிகர தகவல்கள் Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More India News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை