நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா எனப் பல நடிகைகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். தமன்னா தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதை நேற்று முன்தினம் தெரிவித்தார். அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சையில் இருக்கிறார்.
கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான பிறகு அவர் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அவர் வீடியோ மூலம் பதில் அளித்திருக்கிறார். அவர் கூறும் போது, கொரோனா தொற்றுக்குப் பிறகு என்ன முன்னெச்சரிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். நான் என்னை எனது அறையில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். வெளியில் எங்கும் செல்வதில்லை. மூச்சுப் பயிற்சி செய்கிறேன். விட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறேன். சத்தான உணவு சாப்பிடுகிறேன். விரைவில் நான் கொரோனாவிலிருந்து குணம் அடைவேன் என்றார்.
கொரோனா பாசிடிவ் என்று தெரிந்தும் பயப்படாமல் தகுந்த முன்னெச்சரிக்கை எடுத்துக்கொண்டு வருவதாக வீடியோ மூலம் தெரிவித்திருக்கும் ரகுலின் நேர்மறை எண்ணத்தை ரசிகர்கள் பாராட்டி வருவதுடன் அவரது வீடியோவை நெட்டில் பலருக்குப் பகிர்ந்து வருகின்றனர். ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் சிவக்கர்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடிக்கிறார். மேலும் அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் மே டே என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்திலும் ரகுல் நடிக்கிறார்.
ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கும் நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், சரத்குமார், விஷால், கருணாஸ், டாக்டர் ராஜசேகர் போன்ற பல நடிகர்கள் உள்ளாகினர், தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் குணம் அடைந்தனர். ஐதராபாத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வந்தது. அங்கு செட்டில் 4 பேருக்கு நேற்று கொரோனா பாசிடிவ் என்று தெரிய வந்ததால் உடனடியாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப் பட்டது. ரஜினிகாந்த்துக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில் நெகடிவ் என்று தெரிந்தது. ஆனாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.