கொரோனா தடுப்பு ஊசி தொடர்பாக ஆந்திரா, அசாம் உட்பட 4 மாநிலங்களில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் ஒத்திகை பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. கிட்டத்தட்ட பெரும்பாலான சோதனை முடிவுகள் சாதகமாகவே அமைந்துள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி விடும் என மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை தகவல் அனுப்பியுள்ளது. தடுப்பூசியைப் பாதுகாப்பாக வைப்பதற்குத் தேவையான வசதிகளை அனைத்து மாநிலங்களும் ஏற்படுத்தி வருகின்றன. மேலும் யார், யாருக்கு முதலில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி போடப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்குள் 30 கோடி பேருக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.
இந்நிலையில் தடுப்பு ஊசி போடுவது தொடர்பாக 4 மாநிலங்களில் ஒத்திகை பார்க்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஆந்திரா, அசாம், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒத்திகை பார்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் தலா 2 மாவட்டங்கள் வீதம் 5 தவணைகளில் ஒத்திகை பார்க்கப்படும். தடுப்பூசிகளைச் சேகரிப்பது, குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் அதைப் பாதுகாப்பது, விநியோகிப்பதற்கான வசதிகள் மற்றும் பொதுமக்களைக் கட்டுப்படுத்துவது ஆகிய பணிகளை முறையாக நடத்த முடிகிறதா என இந்த ஒத்திகையில் பரிசோதிக்கப்படும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மையத்திலும் டாக்டர்கள் தவிர நர்ஸ், மருந்தாளர் மற்றும் போலீஸ் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒரு நாளில் ஒரு மையத்தில் 200 பேருக்குத் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போட்ட பின்னர் அவர்கள் அரைமணி நேரம் கண்காணிக்கப்படுவார்கள். ஏதாவது ஒவ்வாமை இருக்கிறதா எனப் பரிசோதிக்கப்படும். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஒவ்வொரு மையத்திலும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வைக்கப்பட்டிருக்கும். இந்த 4 மாநிலங்களிலும் ஒத்திகை சரியான முறையில் நடைபெறுகிறதா என்பதை மத்திய சுகாதாரத் துறை கண்காணிக்கும். இதன் பிறகே தடுப்பூசிகளை அனைத்து மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.