எனது தந்தையே என்னை விதவையாக்கி விட்டார்... கொல்லப்பட்ட வாலிபரின் காதல் மனைவி உருக்கம்

by Nishanth, Dec 26, 2020, 11:34 AM IST

பள்ளிப் பருவத்திலிருந்தே நாங்கள் இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்தோம். எனது தந்தையே என்னை விதவையாக்குவார் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று கதறி அழுகிறார் பாலக்காட்டில் கவுரவக் கொலைக்கு இரையான வாலிபரின் மனைவி ஹரிதா.பாலக்காடு அருகே உள்ள தேன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அனீஷ். இதே பகுதியைச் சேர்ந்தவர் பிரபு குமார் இவரது மகள் ஹரிதா. இருவரும் பல வருடங்களாக உயிருக்குயிராக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் ஹரிதா செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் அனீஷின் குடும்பம் ஏழ்மையில் வாடி வரும் குடும்பமாகும். இவரது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். இந்த காரணங்களால் தங்களது மகள் அனீஷை காதலிப்பதில் ஹரிதாவின் குடும்பத்தினருக்குச் சற்றும் விருப்பம் கிடையாது. இதனால் அவர்களது காதலை ஹரிதாவின் குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் எதிர்ப்பை மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன் அனீஷும், ஹரிதாவும் திருமணம் செய்து கொண்டனர்.

இது ஹரிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. 3 மாதங்களுக்கு மேல் இருவரையும் ஒன்றாக வாழ விட மாட்டோம் என்று ஹரிதாவின் தந்தை பிரபு குமார் அனீஷின் வீட்டுக்குச் சென்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அனீஷின் தந்தை ஆறுமுகம் பாலக்காடு போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு அனீஷை ஹரிதாவின் தந்தை பிரபு குமார் மற்றும் அவரது மாமா சுரேஷ் ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொன்றது பாலக்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். திருமணத்திற்கு முன் தன் பெற்றோருடன் பங்களாவில் வசித்து வந்த ஹரிதா, திருமணத்திற்குப் பின் தனது காதல் கணவன் அனீஷின் குடிசை வீட்டில் தான் வசித்து வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அனீஷின் காதல் மனைவி ஹரிதா கூறியது: நானும் அனீஷும் பள்ளியில் படிக்கும் போதே தீவிரமாக காதலித்து வந்தோம். அனீஷின் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதாலும், அவர் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதாலும் என்னுடைய பெற்றோருக்கு அவரை திருமணம் செய்வதில் விருப்பம் கிடையாது. ஆனாலும் எனது வீட்டுக்கு வந்து என்னை அனீஷ் பெண் கேட்டார். இதன் பின்னர் அனீஷிடம் என்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். என்னுடைய குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி நாங்கள் திருமணம் செய்தது அவர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. ஒருமுறை என்னுடைய மாமா சுரேஷ் வீட்டுக்கு வந்து எங்களை மிரட்டி விட்டு என்னுடைய போனையும் பறித்துச் சென்றார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸ் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் என்னுடைய கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றிருக்க மாட்டார். என்னுடைய தந்தையே என்னை விதவையாக்குவார் என நான் கனவில் கூட நினைத்துப் பார்க்க வில்லை என்று கூறினார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை நடத்தப்படும் என்று கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் கூறினார். கேரளாவில் இதுபோன்ற கவுரவ கொலை சம்பவங்கள் நடப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You'r reading எனது தந்தையே என்னை விதவையாக்கி விட்டார்... கொல்லப்பட்ட வாலிபரின் காதல் மனைவி உருக்கம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை