டெல்லியில் போராடும் விவசாயிகள், அவர்கள் தங்கியுள்ள மைதானத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.27) 32வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் லாபம் என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில் போராட்டத்திற்கு தீர்வு காண்பதில் இழுபறி நீடித்து வந்தது. தற்போது வரும் 29ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருவதாக விவசாயிகள் மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், டெல்லி எல்லையில் சிங்கு பகுதி, திக்ரி பகுதி உள்ளிட்ட இடங்களில் போராடும் விவசாயிகள் சலவையகம், நூலகம் மற்றும் பல்வேறு வசதிகளையும் செய்து அங்கேயே வாழத் தொடங்கி விட்டனர். போராடும் விவசாயிகளுக்கு புராரி மைதானம் ஒதுக்கப்பட்டிருந்தது.
விவசாயிகள் தற்போது அந்த மைதானத்தில் வெங்காயம் போன்ற சிறு பயிர்களையே நடத் தொடங்கி விட்டனர். இது பற்றி ஒரு விவசாயி கூறுகையில், நாங்கள் இங்கேயே மாதக் கணக்கில் இருக்க வேண்டியுள்ளது. போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை. அதனால் இங்கேயே பல வேலைகளை செய்து வருகிறோம். அதில் ஒன்றாக இந்த பயிரிடும் பணியும் நடக்கிறது. இதில் கிடைக்கும் வெங்காயம் எங்கள் உணவுக்கு பயன்படும் என்றார்.