கார்களின் முன்பக்க பம்பர்களை அகற்ற சொல்வது ஏன்?

by Balaji, Dec 27, 2020, 11:55 AM IST

தற்போது கார்களின் இருந்தால் முன்புறம் பம்பர் பொருத்தப்பட்டு இருந்தால் அதை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி அகற்றாத வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து மற்றும் காவல்துறையினர் அபராதம் விதிக்கிறார்கள். பம்பர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் இவர்களுக்கு என்ன? அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கார்களில் பம்பர் இருக்கிறது. அதை ஏன் அகற்ற சொல்லவில்லை, என்று இந்த விஷயத்தில் பலர் சீறுவதை பார்க்க முடிகிறது. இதுகுறித்து மோட்டார் வாகன துறையில் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர் ஒருவரிடம் கேட்ட போது அவர் சொன்னது: கார்களின் முகப்பில் பம்பர் இருந்தால் நம் உயிருக்கே பாதிப்பு வரலாம்.

பல லட்சம் மதிப்புள்ள காரின் முன்பாகம் எங்கேயாவது இடித்து சேதமடைந்து விடாமல் இருக்க பம்பர் பொருத்தப்படுகிறது. ஆனால் விலைமதிப்பில்லாத நம் உயிரை பற்றி சிந்தனையில்லாமல் இருக்கிறோம். தற்போது புதிதுபுதிதாக புதிய மாடல் கார்கள் சந்தைக்கு வருகிறது. இந்த கார்கள் அனைத்திலும் ஓட்டுனரின் முன்பு இருபக்கத்திலும் (சில கார்களில் பின் சீட்டை ஒட்டியும் இருக்கும்) ஏர் பேக் இருக்கும், காரின் முன்பக்கம் இடிப்பட்டு விபத்தாகும் பட்சத்தில், அந்த ஏர்பேக் தானாகவே விரிந்து நம் முகத்தில் படர்ந்து எந்த காயமும் ஏற்படாமல் நம்மை பாது காக்கும். இந்த ஏர்பேக் சிஸ்டம் வேலை செய்வதற்காக காரின் முன் பக்கத்தில் இரு இருபுறங்களிலும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் காரின் முன்பகுதியில் அழுத்தம் அதிகமானால் (அதாவது மோதினால்) உடனே காரின் உள்ளே இருக்கும் ஏர்பேக் தானாகவே விரிந்துவிடும். காரின் முன் பகுதியில் சேதம் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே பம்பர்கள் பொருத்தப்படுகின்றன. ஏதாவது விபத்து ஏற்படும் போது பம்பர் இருப்பதால் காரின் முகப்பு குறிப்பாக ரேடியேட்டர் சேதமடையாமல் இருக்கும். அதே நேரத்தில் ஏர்பேக்கின் சென்சாருக்கு போதிய அழுத்தம் கிடைக்காமல் போய்விடும். இதனால் காருக்குள் இருக்கும் ஏர்பேக் வேலை செய்யாமல் போய்விடும்.

ஆகவே கார் மோதிய வேகத்தில் நாம் முன்பக்கம் சாயும் போது, கண்ணாடியில் மோதி மூக்கு, தலையில் அடிபட்டு சில நேரங்களில் உயிரழப்பும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆகவே பம்பர்கள் இருக்கக்கூடாது என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதை மீறுவோருக்கு தான் வாகன சட்டப்படி வட்டார போக்குவரத்து மற்றும் காவல்துறையினர் அபராதம் விதிக்கிறார்கள். அரபு நாடுகளில் போலிஸ் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்திலும், பம்பரை காண முடியாது. மீறி இருந்தால், அது போக்குவரத்து குற்றமாக அங்கு கருதப்படுகிறது.

You'r reading கார்களின் முன்பக்க பம்பர்களை அகற்ற சொல்வது ஏன்? Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை